Published : 24 Jan 2022 08:19 PM
Last Updated : 24 Jan 2022 08:19 PM

இப்போதைய எதிர்க்கட்சிகளை வைத்துக்கொண்டு 2024-ல் பாஜகவை வீழ்த்துவது சந்தேகமே: பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி: 2024ல் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே; ஆனால் இப்போதைய எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு சந்தேகம் என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர். இந்திய தேர்தல் களத்தில் பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல வகையறாவைச் சேர்ந்தவர்.

இந்தியாவில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன்னர் மோடி அலை என்ற வார்த்தையை உருவாக்கியவரே பிரசாந்த் கிஷோர் தான். அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் பாஜக பல்வேறு மாநிலங்களிலும் தலைதூக்க அவரது உத்திகள் கைகொடுத்தன. ஆனால், ஓர் உறையில் இரு வாள் சாத்தியமில்லை என்பதுபோல் அமித் ஷாவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் வலுக்க இனிமேல் பாஜக பக்கம் நிற்பதில்லை என முடிவு செய்தார். பாஜகவுக்கு எதிராக திரள்பவர்களை வெற்றி பெறச் செய்வதே இலக்கு என்று பகிரங்கமாக அறிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டார் என்றால் அது மிகையல்ல. அதன் பின்னர் இனி தேர்தல் உத்தி வகுப்பாளராக இருக்கப்போவதில் ஐபேக் நிறுவனத்தை எனது நண்பர்கள் ஏற்று நடத்துவார்கள் என விலகினார். இருந்தாலும் அவரால் அரசியலில் இருந்து விலகி நிற்க முடியவில்லை. இன்று வரை அரசியல் நிமித்தான கணிப்புகளையும், கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறி வருகிறார்.

கடந்த ஓராண்டு காலத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப் போகிறார், திரிணமூல் காங்கிரஸில் இணையப் போகிறார், தேசியவாத காங்கிரஸில் இணைகிறார் என்று எல்லா கட்சிகளுடனும் சேர்த்துப் பேசப்பட்டுவிட்டார். ஆனால் இதுவரை அவர் எதிலும் ஐக்கியமாகவில்லை.
அதேவேளையில் 2024 தேர்தல் பற்றி தொடர்ந்து அவர் ஏதேனும் கருத்து கூறிவருகிறார். அந்த வகையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: 2024ல் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமே. நாடாளுமன்றத் தேர்தலின் வெள்ளோட்டம் என அறியப்படும் உத்தரப் பிரதேச தேர்தலில் ஒருவேளை முடிவு வேறு மாதிரி வந்தாலும் கூட 2024ல் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே. ஆனால், இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு சாத்தியமா என்று கேட்டால் சந்தேகம் என்றே சொல்வேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எனக்கு ஒரு வலுவான எதிரணி தேவை. பாஜக இந்துத்துவா, தேசியவாதம் மற்றும் மக்கள் நலன் என்ற தளங்களில் வலுவாக நின்று கொண்டுள்ளது. அதை இரண்டு அம்சங்களிலாவது நாம் வீழ்த்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் நான் ஐந்து மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தினேன் பலனில்லை. மற்ற கட்சியினரும் நானும் காங்கிரஸும் இணைந்து செயல்பட வேண்டும் என்றே விரும்பினர். ஆனால் அதற்கு பரஸ்பரம் நம்பிக்கை தேவைப்பட்டது. அது ஏற்படவில்லை. நான் எப்போதும் காங்கிரஸைப் பார்த்து ரசிப்பேன். அதன் கொள்கை, எனக்கு ஏற்புடையது. காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி சாத்தியமே இல்லை.

ஆனால், அதற்காக காங்கிரஸ் தலைமையில் தான் எதிர்க்கட்சி அமைய வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை. பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் ஒரு புதிய உத்வேகம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் பரவலாக விவாதப் பொருளாக மாறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x