

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலப் பேரவைத் தோ்தல் பிப். 20-இல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவர் டெல்லி சென்று பாஜகவை தலைவர்களை சந்தித்து அக்கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்தார். இதுமட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சா் தின்சாவின் சம்யுக்த சிரோமணி அகாலிதளம் கட்சியுடனும் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இந்த இருகட்சிகளுக்கும் மாறாக பாஜக கூட்டணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று அறிவித்தார். அதன்படி. பாஜக 65 தொகுதிகளிலும், அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது.