Published : 24 Jan 2022 03:52 PM
Last Updated : 24 Jan 2022 03:52 PM

‘‘அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இரவு உணவு’’ - 5 மாநில தேர்தலில் ஆம் ஆத்மி நூதன பிரச்சாரம்

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி டிஜிட்டல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி, டெல்லி அரசு செய்துள்ள சிறப்பான திட்டங்களை மற்ற மாநில மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலை தளங்களில் தகவல்களை வைரலாக்கும் 50 நபர்களுடன் தேர்தலுக்குப் பிறகு கேஜ்ரிவால் இரவு உணவு சாப்பிடுவார் என அறிவித்துள்ளது.

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாபிலும், கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கோவா சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்.14-ம் தேதி நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனது பலத்தை நிருபிக்கத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ள, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான டிஜிட்டல் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி, இன்று தொடங்கியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த நல்ல பணிகளை சமூக ஊடகங்களில் பரப்புமாறு அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

இன்றிலிருந்து டிஜிட்டல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். டெல்லி மக்கள் மற்ற மாநில மக்களிடம் ஆம் ஆத்மி செய்த பணிகளைச் சொல்லி வீடியோக்களை உருவாக்கி, தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

டெல்லி அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்த வீடியோக்களை பதிவேற்றி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்கில் நீங்கள் எவ்வாறு பயனடைந்தீர்கள் என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள். தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் உங்களுக்குத் தெரிந்த வாட்ஸ்அப் நபர்கள், ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கங்கள். ஏக் மௌகா கேஜ்ரிவால் கோ” (கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்) பிரச்சாரத்தை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

டெல்லியில் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது போன்ற பல நல்ல பணிகளை தனது அரசு செய்துள்ளது. டெல்லியில் இயங்கும் மொஹல்லா கிளினிக்குகளைப் பார்க்க ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அமெரிக்க அதிபரின் மனைவி இங்குள்ள பள்ளிகளுக்குச் சென்றார். டெல்லியில் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. டெல்லி மக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததால் இவை அனைத்தும் சாத்தியமானது. இதுபோலவே மற்ற மாநில மக்களும் வாய்ப்பு தர வேண்டும்.

இதுபோன்ற காணொலிகளை பகிரவும், அவற்றை பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக்கவும் அவர் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இதுபோன்று வீடியோக்களை வைரலாக்கும் 50 நபர்களுடன் தேர்தலுக்குப் பிறகு, நான் இரவு உணவு சாப்பிடுவேன்.’’ என அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x