

புதுடெல்லி: நாடு முழுவதும் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 162.26 கோடியைக் கடந்தது. இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 3.33 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்துக்கும் அதிகமாக (27,56,364)) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 162.26கோடியைக் (1,62,26,07,516) கடந்தது. 1,75,24,670 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,43,495 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.07 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,49,335 ஆக உள்ளது; நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 5.69 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,74,753 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 71.69 கோடி கோவிட் பரிசோதனைகள் (71,69,95,333) செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று 17.03 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 20.75 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.