

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 15 வய்துக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என டெல்லி போலீஸ் பல்வேறு கெடுபிடிகளையும் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. தற்போது அது 15 வயது வரையிலான குழந்தைகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை டோஸும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 7 மணிக்கே பார்வையாளர்கள் பகுதி திறந்துவிடப்படும். பார்க்கிங் வசதி குறைக்கப்பட்டுள்ளதால் விழாவுக்கு வருவோர் வாடகை கார் அல்லது ஒரே காரில் பலரும் பகிர்ந்து வரவும். விழாவுக்கு வருவோர் அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு துறை சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பார்க்கிங் பகுதியிலும் ரிமோட் கன்ட்ரோல் வசதியுள்ள கார் சாவிகளை ஒப்படைக்க தனியிடம் இருக்கும். அங்கே சாவிகளை ஒப்படைத்துவிட்டே விழா பகுதிக்குள் நுழைய வேண்டும்.
ஒவ்வொரு நபரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். 15 வயதுக்கு குறைவான வயதுடையோருக்கு நிகழ்ச்சியில் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா பாதுகாப்புப் பணியில் 71 டிசிபிக்கள், 213 ஏசிபிக்கள், 753 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 27 ஆயிரத்து 723 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர கடந்த 20 ஆம் தேதி முதலே டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விடுதிகள், மேன்சன்கள், குடியிருப்புகள் என அவ்வப்போது போலீஸார் ரெய்டு நடத்தி தீவிரவாதிகள் யாரும் பதுங்கியிருக்கின்றனரா என கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.