

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிப்பொழிவு காரண மாக ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பலத்த மழையும் பனிப்பொழிவும் நிலவுகிறது. ஆங்காங்கே நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு - நகர் தேசிய நெடுஞ்சாலையின்பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 270 கி.மீ. நீளமுள்ள ஜம்மு - நகர் தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது.
இதனால், அந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சந்திரகூட்மற்றும் ரம்சு ஆகிய இடங்களுக்கிடையே 100-க்கும் மேற்பட்ட லாரிகள் நிற்கின்றன. சாலைகளில் கற்களையும் மண்ணையும் அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஹெலிகாப்டர் சேவை ரத்து
மேலும், மோசமான வானிலை காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், சாலை வழியே யாத்திரை தொடர்ந்து நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் எனினும், இடிபாடுகள் அகற்றப்பட்டு யாத்ரீகர்களுக்கு அந்தப் பாதை திறந்துவிடப்பட்டதாகவும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அருகே உள்ள பைரோன் கட்டி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக தரையில் 1 அடிஅளவுக்கு பனி படர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
- பிடிஐ