Published : 24 Jan 2022 07:14 AM
Last Updated : 24 Jan 2022 07:14 AM

அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்: நாட்டின் மிக உயரமான மனிதர் தர்மேந்திர பிரதாப் சிங்

லக்னோ: நாட்டின் மிகவும் உயரமான மனிதர் என்று அறியப்பட்ட தர்மேந்திர பிரதாப் சிங் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பணியாற்றி வருவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். 8 அடி 2 அங்குலம் உயரம் உள்ள இவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் நேற்று இணைந்தார். 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நண்பர் ஒருவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, "கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவின் தலைமை மீது நம்பிக்கை வைத்து, பிரதாப்கரைச் சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், தர்மேந்திர பிரதாப் சிங்கின் வருகையால் சமாஜ்வாதி கட்சி வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்" என்றார்.

இதுகுறித்து தரமேந்திர பிரதாப் சிங் கூறும்போது, "என்னுடைய உயரத்தால் நான் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நான் வெளியில் செல்லும்போது எல்லாம் அதிக கவனத்தை ஈர்க்கிறேன். நான் மிகவும் பிரபலமாக இருக்கிறேன், எல்லாவற்றுக்கும் எனது உயரம்தான் காரணம். சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்" என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x