

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ்சமூக பரவலாக மாறியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்தகூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் 38 ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் கரோனா நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு எந்த வகை கரோனா வைரஸ் என்பது கண்டறியப்படுகிறது.
இந்தியாவில் கரோனா பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து இன்சாகாக் சார்பில்அவ்வப்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அண்மையில் வெளி யிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கரோனாவின் டெல்டா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும்உடல்நல பாதிப்பு குறைவாகஉள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனினும், ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளது. குறிப்பாக நகரங்களில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது. அண்மையில் ஐ.எச்.யு.என்ற வகை கரோனா வைரஸும்இந்தியாவில் கண்டறியப்பட்டுள் ளது. இந்த வைரஸ் வேகமாகப் பரவவில்லை. எனினும் புதியவைரஸ் பரவலையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- பிடிஐ