Published : 24 Jan 2022 06:30 AM
Last Updated : 24 Jan 2022 06:30 AM

டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது; இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலை; பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்: மறைக்கப்பட்ட அடையாளங்களை புதுப்பிப்போம் என உறுதி

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முப்பரிமாண மின்ஒளி சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். உடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்தீப் சிங் புரி உள்ளனர்.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தியா கேட் பகுதியில்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மின் ஒளி (ஹாலோகிராம்) சிலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, மறைக்கப்பட்ட வரலாற்று அடையாளங்களை புதுப்பிப்போம் என உறுதி அளித்தார்.

இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் 125-வதுபிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதிமுக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘நேதாஜியை கவுரவிக்கும் வகையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு நாடு செலுத்தும் நன்றிக் கடனாகும். சிலை நிறுவப்படும் வரை அவரின் உருவம் முப்பரிமாண மின் ஒளியில் (ஹாலோகிராம்) திரையிடப்படும்’ என்று பிரதமர் அறிவித்தார்.

அதன்படி, நேதாஜியின் பிறந்தநாளான நேற்று, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரது முப்பரிமாண மின் ஒளி (ஹாலோகிராம்) சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அடிபணியவில்லை. அவர்களை எதிர்த்து வீர, தீரத்துடன் போரிட்டார். அவரை கவுரப்படுத்தும்விதமாக இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. அதுவரை அவரது முப்பரிமாண மின் ஒளி சிலை இந்தியா கேட் பகுதியில் ஒளிரும்.

நேதாஜியின் பிறந்த தினம்பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்றைய தினம் நேதாஜியின் நினைவாக பேரிடர் மேலாண்மையில் சேவையாற்றிய நிறுவனம், தனிநபருக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மிக நீண்டகாலமாக பேரிடர் மேலாண்மை, வேளாண் துறையின்கீழ் இருந்தது. கடந்த 2001-ம் ஆண்டில் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அனுபவத்தை கருத்தில்கொண்டு, குஜராத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைப் பின்பற்றி மத்திய அரசுகடந்த 2005-ம் ஆண்டில் பேரிடர்மேலாண்மை சட்டத்தை நிறைவேற்றியது. அதன்பின், தேசிய பேரிடர்மேலாண்மை ஆணையம் தொடங்கப்பட்டது. இதன்காரணமாகவே தற்போதைய கரோனா பெருந்தொற்றையும் திறம்பட எதிர்த்து போரிட முடிகிறது.

நேதாஜியின் முப்பரிமாண மின் ஒளி சிலை.படங்கள்

சுதந்திர இந்தியாவை காண வேண்டும் என நேதாஜி கனவு கண்டார். அவரது கனவின்படி இந்தியா சுதந்திரம் அடைந்தது. வரும் 2047-ம் ஆண்டில் 100-வதுசுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளோம். அப்போது புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கை எட்டிப் பிடிக்க அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகுவிடுதலைப் போராட்ட தலைவர்கள் பலரின் பங்களிப்பு மறைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை இப்போது சரி செய்து வருகிறோம். நேதாஜி தொடர்பான ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்காக பகிரங்கமாக வெளியிட்டோம். நேதாஜியிடம் இருந்து பெற்ற உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்தியாவின் மறைக்கப்பட்ட அடையாளங்களை புதுப்பிப்போம்.

இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க காலம் ஆகும். நாம் நிற்கும் இந்தியா கேட் பகுதியும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இந்த இடத்தில் நேதாஜியின் முப்பரிமாண மின் ஒளி சிலையை ஒளிரச் செய்துள்ளோம். இதே இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை நிறுவப்பட உள்ளது. இது நாட்டின் சுதந்திரப் போராட்ட தலைவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

நேதாஜி நினைவாக விருது

பேரிடர் மேலாண்மையில் தன்னலமற்ற, மதிப்புமிக்க தொண்டாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபரை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற பெயரில் விருது நிறுவப்பட்டிருக்கிறது. நிறுவனம் மற்றும் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. நிறுவனத்துக்கான விருதில் ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், தனிநபர் விருதில் ரூ.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது..

இந்த ஆண்டு விருதுக்காக நிறுவனங்களிடம் இருந்தும், தனிநபர்களிடம் இருந்தும் 243 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தனிநபர் பிரிவில் பேராசிரியர் வினோத் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கும், கடந்த 2019, 2020, 2021-ம் ஆண்டு விருதாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று விருதுகளை வழங்கினார்.

குடியரசு தின விழா கொண்டாட்டம்

முன்னதாக நேதாஜியின் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரதுஉருவப் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேதாஜி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மக்களவை செயலகத்தின் சார்பில் நேதாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில், அவருக்கு தலைவணங்குகிறேன். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய முக்கியமான பங்களிப்பு குறித்துஒவ்வொரு இந்தியரும் பெருமிதம்கொள்கின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

நாட்டின் குடியரசு தின விழா, வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இரண்டு நாட்கள்முன்னதாக ஜனவரி 24-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்குவது வழக்கம். நேதாஜியின் மிகச்சிறந்த பங்களிப்பை போற்றும் வகையில், இந்த ஆண்டு முதல்அவரது பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதியே குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, குடியரசு தின விழா கொண்டாட்டம் நேற்றே தொடங்கியது. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி வரை விழா நீடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x