

விஜயநகரம்: ஆந்திராவில் பசியால் வாடிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றிய 2 போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆந்திராவின், விஜயநகரம் மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் விஜயகுமார், சத்யநாராயணா ஆகியோர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் ஒரு முதியவர் பசியால் வாடி, அவ்வழியாக சென்றோரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த 2 போக்குவரத்து போலீஸாரும் கடையில் ஓஆர்எஸ் ஜூஸ் வாங்கி அவருக்கு கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். உரிய நேரத்தில் முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால், அவர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங், சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளருமான லோகேஷ் உட்பட பலரும் பாராட்டி உள்ளனர். விஜயநகரம் எஸ்பி தீபிகா, போக்குவரத்து போலீஸ்காரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனிதாபிமானத்தை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.