'உ.பி.,யில் எங்கள் ஆட்சி அமைத்தால் 2 முதல்வர்கள்; 3 துணை முதல்வர்களை உருவாக்குவோம்': எடுபடுமா ஒவைஸி பிரச்சாரம்?

'உ.பி.,யில் எங்கள் ஆட்சி அமைத்தால் 2 முதல்வர்கள்; 3 துணை முதல்வர்களை உருவாக்குவோம்': எடுபடுமா ஒவைஸி பிரச்சாரம்?
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்தால் உ.பி.க்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தின் இரண்டு முதல் அமைச்சர்களும், மூன்று முஸ்லிம் துணை முதல்வர்களும் அமர்த்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதீன் முஸ்லிமீன்(ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி, ஹைதராபாத்தின் எம்.பி.,யாக உள்ளார். ஆந்திராவிற்கு வெளியிலுள்ள மாநிலங்களிலும் இவரது கட்சி போட்டியிடத் துவங்கி உள்ளது.

இந்தவகையில், உ.பி.யிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி இரண்டாவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவைஸி, உ.பி.யின் மூன்று கட்சிகளுடன் இணைந்து ஒரு புதிய கூட்டணி அமைத்துள்ளார்.

‘பாகீதாரி பரிவர்தன் மோர்ச்சா’ எனும் பெயரிலான இக்கூட்டணியில் ஜன் அதிகார் கட்சியும், பாரத் முக்தி மோர்ச்சாவும் இடம் பெற்றுள்ளன. இதில், முன்னாள் உ.பி. அமைச்சரான குஷ்வாஹா, ஜன் அதிகாரி கட்சியைத் துவக்கி அதன் தலைவராகவும் இருக்கிறார்.

முதல்வர் மாயாவதியின் 2007-12 ஆண்டுகளின் ஆட்சியில் மருத்துவநலத்துறை அமைச்சராக இருந்தவர் பாபுசிங் குஷ்வாஹா. இவர், தேசிய ஊரக மருத்துவநல மிஷன் திட்டத்தில் ஊழல் செய்ததாக பல வருடங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

இதனால், தலைவர் மாயாவதியால் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து குஷ்வாஹா நீக்கப்பட்டிருந்தார். பாபுசிங் குஷ்வாஹாவின் வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

மற்றொரு கட்சியான பாரத் முக்தி மோர்ச்சாவின் பட்டியலின சமூக ஆதரவிற்காக துவக்கப்பட்டது. இதன் தலைவராக வாமன் மேஷ்ராம் என்பவர் வகிக்கிறார்.

இவர்கள் இருவரது கட்சியுமே உ.பி. தேர்தல்களில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள முஸ்லிம் கட்சியான ஏஐஎம்ஐஎம், ஏற்கெனவே தனது 27 வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவித்திருந்தது.

பிப்ரவரி 14 முதல் துவங்கி மார்ச் 7 வரையில் ஏழு கட்டங்களாக உ.பி. தேர்தல் நடைபெறுகிறது. இதன் முதல்கட்டத்திற்கான 58 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டன.

எனினும், மீதமுள்ள 348 தொகுதிகளில் இக்கூட்டணியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். நேற்று வெளியான இப்புதிய கூட்டணியில் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் மட்டும் 100 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதுவரை எந்த மாநிலத் தேர்தல்களிலும் இல்லாத முக்கிய அறிவிப்பு ஒவைசியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உ.பி.,க்கு இரண்டு முதல்வர்களும், மூன்று துணை முதல்வர்களும் அறிவிக்கப்பட்டுள்ளர்.

கூட்டணி ஆட்சி அமைத்தால், முதல்வர்களாக தலித் மற்றும் ஒபிசி சமூகத்தினரும், முஸ்லிம்கள் மூன்று துணை முதல்வர்களாகவும் பதவி வகிக்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த அறிவிப்பை அளித்த கூட்டணி உ.பி.யின் ஒரு தொகுதிடையும் பெறுவது கடினம் எனக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in