Last Updated : 23 Jan, 2022 02:03 PM

 

Published : 23 Jan 2022 02:03 PM
Last Updated : 23 Jan 2022 02:03 PM

காங்கிரஸுக்கு வாக்களித்து உங்கள் உரிமையை வீணடிக்காதீர்: மவுனம் கலைத்த மாயாவதி உ.பி. மக்களுக்கு வேண்டுகோள்

லக்னோ: காங்கிரஸுக்கு வாக்களித்து மக்கள் தங்களின் வாக்குரிமையை வீணடிக்க வேண்டாம் என உத்தரப் பிரதேச மக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தன்னை முதல்வர் வேட்பாளர் என அடையாளம் காட்டிய சில மணி நேரத்திலேயே பிரியங்கா காந்தி அதனை மறுத்துப் பேசுகிறார்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்களின் உரிமையை வீணாக்க வேண்டாம். மாறாக ஒருமனதாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாங்களிக்கலாம். உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். அதை காங்கிரஸால் செய்ய முடியாது. காங்கிரஸ் வாக்குகளை சிதறடிக்கும் கட்சியாகவே உள்ளது" என்றார்.

முன்னதாக நேற்று, பிரியங்கா காந்தி அளித்தப் பேட்டி ஒன்றில் மாயாவதியின் மவுனம் ஆச்சர்யமளிப்பதாகக் கூறியிருந்தார். உத்தரப் பிரதேசத் தேர்தலில் இதுவரை மாயாவதி அமைதியாகவே உள்ளார். இது ஆச்சர்யமளிக்கிறது என அவர் கூறியிருந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி தனது பாணி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் மாயாவதி.

சொன்னதை மறுத்த பிரியங்கா: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அக்கட்சி சார்பில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும், வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே, காங்கிரஸும் கணிசமான வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், பாஜகவும், சமாஜ்வாதியும் முதல்வர் வேட் பாளர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. இது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “உ.பி. காங்கிரஸ் கட்சியில் என்னை தவிர வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தெரிகிறதா? பிறகென்ன?” எனக் கேள்வியெழுப்பினார். பிரியங்கா காந்தியின் இந்த சூசகமான பதிலால், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப் படுவார் என்ற ஊகங்கள் வேகமாக பரவின.

இந்நிலையில் பிரியங்கா காந்தி நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் மட்டுமே உத்தரபிரதேச காங்கிரஸின் முகம் என்று நான் கூறவில்லை. செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுப்பியதால் சற்று மிகைப்படுத்தி கூறினேன். அவ்வாறு எந்த முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x