Published : 23 Jan 2022 06:27 AM
Last Updated : 23 Jan 2022 06:27 AM

நொய்டாவில் விதி மீறி கட்டிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுக்கு பணம் தரவேண்டும்: சூப்பர்டெக் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்க பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பித் தருமாறு சூப்பர்டெக் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசுமை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுர கிரவுன்டெக் குடியிருப்பை இடிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இங்கு வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு பணத்தை சூப்பர் டெக் நிறுவனம் அளிக்கவில்லை என்றும் இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் சூப்பர்டெக் நிறுவனம் மீது வீடு வாங்க முன்பணம் செலுத்தியவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பெலா எம் திரிவேதி ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் பணத்தை திருப்பி அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

இரட்டைக் கோபுரம் போல 40 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 633 வீடுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்டது. இதில் 252 பேருக்கான தொகை திரும்ப அளிக்க வேண்டியுள்ளது. 133 பேர் சூப்பர் டெக் நிறுவனத்தின் வேறு கட்டுமான திட்டத்தில் வீடு வாங்க அந்தத் தொகையை மறு முதலீடு செய்வதாக தெரிவித்தனர். 248 பேர் செலுத்திய தொகையை திரும்பப் பெற்று விட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடராத அதேசமயம் முன்பணம் செலுத்தியவர்களுக்கும் தொகையை திருப்பித் தரவேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. பணம் செலுத் திய வாடிக்கையாளரின் வங்கி விவரம் உள்ளவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். கணேஷ் உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x