Last Updated : 23 Jan, 2022 06:24 AM

Published : 23 Jan 2022 06:24 AM
Last Updated : 23 Jan 2022 06:24 AM

இந்திய விடுதலையில் நேதாஜி!

ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சிறந்த நண்பர்கள். ஆனால் இரு தலைவர்களும் கருத்து வேற்றுமை உடையவர்கள்.

நேரு நிதானமானவர். போஸ் சற்று வேக மானவர். தீவிர சோஷலிஸ்ட் கொள்கையைக் கடைபிடித்த போஸ், பொருளாதாரக் கொள் கையில் வலதுசாரிகளின் பக்கம் சாயும் காங்கிரஸ் தலைவர்களுடன் மிகக் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். அகிம்சை,ஒத்துழையாமை பேசும் காந்தியக் கொள்கைகளை போஸ் நிராகரித்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான மிதவாதப் போராட்டத்தையும் அவர் நிராகரித்தார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக போஸ் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய புகழ் மேலோங்கியது.

புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ருத்ராங்ஸு முகர்ஜி ‘நேருவும் சுபாஷும் இணையான இரு வாழ்க்கை’ என்ற நூலில், 1939-ஆம் ஆண்டு சுபாஷ் கூறியதாக எழுதுகிறார்: எனக்கு நேருவைவிட அதிகம் தீங்கு செய்தவர் யாரும் இல்லை. ஆனால், தம்முடைய இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவுக்கு நேருவின் பெயரை போஸ் ஏன் வைக்க வேண்டும்? என்ற முகர்ஜி மேலும் எழுதுகிறார்: சுபாஷின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நேரு ஏன் கண்ணீர் விட்டு அழுதார் எனக் கேட்டு, நான் அவரை என்னுடைய இளைய சகோதரர் போல நடத்தினேன் என்று நேரு குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். மகாத்மாகாந்தி நேருவைத் தம் வாரிசாகத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இந்திய தேசிய ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வழக்கில் அவர்களுக்காக நேருதான் வாதாடினார் என்பது உண்மை.

1935-ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் எழுதி லண்டனில் பிரசுரிக்கப்பட்ட ‘இந்தியாவின் போராட்டம்’ என்னும் நூலில் அவர் தெரிவித்த கருத்துகள், நேருவின் கொள்கையிலிருந்து மிகத் தீவிரமாக மாறுபட்டு நின்றன. பாஸிசமும் கம்யூனிஸமும் கலந்த ஓர் அமைப்பை உருவாக்க போஸ் விரும்பினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நாட்டுக்குத் தேவை என்றார் போஸ். தங்குதடையில்லாத வளர்ச்சிக்கும் சமூக சமத்துவம் உறுதி செய்யப்படவும் அத்தகைய அமைப்பு தேவை என்றார். தனி நபர் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் முக்கியமாக கருதும் நேருவுக்கு இத்தகைய கொள்கைகளில் உடன்பாடு இல்லை.

நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சிறந்த வரலாற்றுப் பேராசிரியர் சர்வபள்ளி கோபால் கூறுவதுபோல, நேருவுக்கு ஜனநாயகவழிமுறை மீது இருந்த நம்பிக்கை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எஃகு போன்று உறுதியானதுமாகும். இதன் அடிப்படையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வயது வந்தோர்அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்த மிகச் சிலநாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு, முக்கியமான, இன்றியமையாத மாற்றங்களை நேரு மேற்கொண்டார்.

1938 இறுதியில், இக்கட்டான சூழலில் கடின முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவான போது, காந்தியவாதிகளுக்கு எதிராக சவால் விடுத்தபோது, தமது சோஷ லிஸ்ட் தோழரும் ‘அரசியலில் மூத்த சகோதரருமான’ நேரு தம்முடன் இல்லை என்பதை போஸ் உணர்ந்தார். இடதுசாரிகளுக்கு எதிராக வலது சாரிகள் செயல்படுவதாக போஸ் கருதியதுபோல், காங்கிரஸை நேரு கருதவில்லை.

உயர்ந்த லட்சியத்தோடும் கொள்கை உறுதியோடும் விளங்கிய சுபாஷ் சந்திரபோஸ் வங்கத்தின் தலைவர் சி.ஆர்.தாஸ் வழி காட்டுதலோடு காங்கிரஸில் செயல்பட்டு வந்தார். 1937 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் சோர்வு ஏற்பட்டது. அந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நினைத்த காந்திஜி 1938-இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை தலைவராக தேர்வு செய்ய பரிந்துரை செய்தார். ஆனால், 1939-இல் திரிபுரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் சுபாஷ் தலைவராக வருவதை அன்றைய சர்வதேச அரசியல் சூழலை மனதில் கொண்டு காந்திஜி விரும்பவில்லை. இந்த பின்னணியில் சுபாஷ் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

தாய்நாட்டைவிட்டு தனிமனிதனாக வெளியேறி, அயல்நாட்டில் இந்திய தேசிய இராணுவம் அமைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆயுதமேந்திய போராட்டத்தைத் தொடங்கினார் நேதாஜி. இறுதியில் அவரது முயற்சி தோல்வியடைந்து, விமான விபத்தில் 1945 ஆகஸ்ட் 18ஆம் நாள் நேதாஜி காலமான செய்தியை இங்கிலாந்து வானொலி அறிவித்தது.

இந்திய விடுதலைக்கு அகிம்சை வழியில் போராடிய காந்தியடிகள் அணுகுமுறைதான் சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. நேதாஜியின் வீரமிக்க அணுகுமுறை தோல்வியைத் தழுவினாலும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. தேசத்தின் தந்தையாக மகாத்மா காந்தியும், தேசத்தின் வீரத்திருமகனாக சுபாஷ் சந்திர போஸும் போற்றப்பட்டு வருகிறார்கள். நேதாஜியின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இத்தருணத்தில் அவரது தியாகத்தை இந்திய மக்கள் என்றென்றும் போற்றி பாராட்டுவார்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x