

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் கட்சியின் உத்தரபிரதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வதேரா, அங்கு தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
உ.பி.யில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சியும் முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச முகம் (முதல்வர் வேட்பாளர்) யார் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா? பிறகென்ன? எனது முகத்தை நீங்கள் எங்கும் பார்க்கலாம்” என்றார். இதையடுத்து உ.பி. முதல்வர் வேட்பாளர் தான்தான் என்று பிரியங்கா சூசகமாக தெரிவித்தாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில் பிரியங்கா காந்தி நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் மட்டுமே உத்தரபிரதேச காங்கிரஸின் முகம் என்று நான் கூறவில்லை. செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுப்பியதால் சற்று மிகைப்படுத்தி கூறினேன். அவ்வாறு எந்த முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லை” என்றார்.
பிரியங்கா மேலும் கூறும்போது, “உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு கதவு மூடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கட்சிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பாஜகவும் சமாஜ்வாதியும் ஒரே மாதிரியான அரசியலை கடைப்பிடிக்கின்றன. ஏனென்றால் அந்த வகையான அரசியலால் அக்கட்சிகள் பலன் அடைகின்றன. மதவாதம் மற்றும் சாதியவாதம் அடிப்படையில் முன்னேறிச் செல்லும் கட்சிகளுக்கு ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்கிறார்கள்” என்றார்.