Published : 22 Jan 2022 07:03 PM
Last Updated : 22 Jan 2022 07:03 PM

படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் நீக்கம்

புதுடெல்லி: படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியின்போது இசைக்கப்படும் பாடல்களின் பட்டியலில் இருந்து மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான அபைட் வித் மீ ஆங்கிலப் பாடல் நீக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29 ஆம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்தாண்டு இந்த நிகழ்ச்சியில் 44 பீகில் வாசிப்பாளர்கள், 16 ட்ரம்பட் இசைக் கலைஞர்கள்,75 ட்ரம்மர்கள் மற்றும் 6 பேண்டு வாத்தியக் கலைஞர்கள் இணைந்து 25 பாடல்களை இசைக்கவுள்ளனர். கடைசிப் பாடலாக சாரே ஜஹான் சே அச்சா பாடல் இசைக்கப்படும். இந்த பேண்ட் வாத்தியக் குழுவில் ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய ஆயுதப் படையினர் இடம் பெற்றுள்ளனர்.

எப்போதுமே இந்த பேண்ட் குழுவினர் வாசிக்கும் பாடல்களில் அபைட் வித் மீ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை இப்பாடல் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் வாழ்விலும் சாவிலும் இறைவனுடன் ஒரு பக்தன் நேரடியாக வேண்டுகோள் விடுக்கும் பாடல். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்ரி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் இயற்றிய பாடல் இது. காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் உயிர் பிரியும் வேதனையில் இருந்தபோது எழுதிய பாடல் இது. மகாத்மா காந்திக்கு இந்த கிறிஸ்துவப் பாடல் மிகவும் பிடித்த பாடலாக இருந்தது. இந்நிலையில் இந்த முறை இப்பாடல் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமே, படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் இசைப்பதற்காக, உள்நாட்டிலேயே இசையமைக்கப்பட்ட இந்தியில் எழுதப்பட்ட பாடல்களை உருவாக்க ஒப்பந்தம் இறுதி கோரப்பட்டது.

தற்போது இசைக்கப்படும் பாடல்கள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதாலும் பல பாடல்கள் கிறிஸ்துவ மதப் பாடல்கள் என்பதாலும் பதிலாக நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், ராணுவத்தின் வீர தீரம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தது.

அந்த நிறுவனங்கள் இசையமைத்துக் கொடுத்த பாடல்களே இந்த முறை ராணுவம் பாசறைக்கு திரும்பும் நிகழ்வில் இசைக்கப்படும் என கூறப்படுகிறது.

டெல்லி இந்தியா கேட்டில் இருந்த அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இணைக்கப்பட்டது. இதற்கான கண்டனக் குரல்கள் அடங்குவதற்குள்ளதாகவே காந்திக்கு பிடித்தமான பாடல் நீக்கப்படதாக செய்தி வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x