Published : 22 Jan 2022 04:55 PM
Last Updated : 22 Jan 2022 04:55 PM

கர்ஹால்  தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி: சமாஜ்வாதி கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது

அண்மையில் பாஜக யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால், அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அகிலேஷ் தற்போது ஆசம்கர் தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

முன்னதாக தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், ஒவ்வொரு தொகுதியையுமே தான் போட்டியிடும் தொகுதியாகக் கருதி கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் அகிலேஷ் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார். சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இதுகுறித்து ராம்கோபால் யாதவ் கூறியதாவது:

‘‘நான் இப்போது முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். எங்கள் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவார். அவர் மகத்தான வெற்றி பெறுவார்’’ என்று கூறினார்.

மக்களவை தொகுதி எம்.பி.யான அகிலேஷ் யாதவ் இதுவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கர்ஹால் 1993 முதல் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா, அகிலேஷ் தனது முதல் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹாலில் போட்டியிடுவது பற்றிப் பேசியிருந்தார். ஆனால் முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் மேலும் பல வாக்குறுதிகளை அளித்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x