தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: பாஜகவில் இருந்து விலகுவதாக லக்ஷ்மிகாந்த் பர்சேகர் அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: பாஜகவில் இருந்து விலகுவதாக லக்ஷ்மிகாந்த் பர்சேகர் அறிவிப்பு
Updated on
1 min read

பனாஜி: கோவா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கோவா ஃபார்வேர்ட கட்சியானது காங்கிரஸுடனும், மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சியானது திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்துள்ளன. ஆதலால், பாஜகவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சிவசேனா, என்சிபி கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால், வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவாவில் பாஜகவை தொடக்கத்திலிருந்து வளர்த்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உட்பல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கோவா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய பர்சேகர், கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், இன்று மாலைக்குள் தனது ராஜினாமாவை முறையாக சமர்ப்பிப்பேன் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ‘‘தற்போதைக்கு நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்வேன்’’ எனக் கூறினார்.

பர்சேகர் தற்போது கோவா தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கைக் குழுவின் தலைவராக உள்ளார் மேலும் கட்சியின் மையக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

2002 மற்றும் 2017 க்கு இடையில் பர்சேகர் மாண்ட்ரேம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தற்போதைய எம்எல்ஏ தயானந்த் சோப்டேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சோப்டே 2017 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு பர்சேகரை தோற்கடித்தார். ஆனால் 2019-ம் ஆண்டு சோப்டே ஆளும் பாஜகவில் மற்ற ஒன்பது தலைவர்களுடன் சேர்ந்தார். இதனால் பாஜகவில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in