

மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது. கமலா குடியிருப்பு என அழைக்கப்படும் இந்தக் கட்டடத்தின் 18-வது தளத்தில், இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
18- வது மாடியில் பற்றிய தீ மளமளவென அந்த தளம் முழுக்க பரவியது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மும்பை முழுவதும் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீ விபத்தால் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.