Published : 22 Jan 2022 12:38 PM
Last Updated : 22 Jan 2022 12:38 PM

உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியல் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

புதுடெல்லி: உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில், 71 சதவீதத்தினரின் ஆதரவை பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 66 சதவீத ஆதரவுடன் 2-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இத்தாலியின் மரியோ ட்ராகி (60 சதவீதம்), ஜப்பானின் ஃபுமியோகிஷிடா (48 சதவீதம்), ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் (44 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித் துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவீதத்தினரின் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பெற்றுள்ளார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 43 சதவீத ஆதரவுடன் 7-வது இடத்தில் உள்ளார். பிரிட்டன் பிரதமர்போரிஸ் ஜான்சன் 26 சதவீதத்துடன்13-வது இடத்தில் இருக்கிறார்.

‘தி மார்னிங் கன்சல்ட்’ கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 84 சதவீதம் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மே மாதத்தில் அவரது ஆதரவு 63 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் தற்போது 71 சதவீதம் ஆதரவைப் பெற்று பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

ஜன.13-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் மாதங்களில் 50 சதவீதத்துக்கு மேல் ஆதரவை வைத்திருந்தார். அதன்பிறகு, கரோனா தொற்றை முறையாகக் கையாளவில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் அவசரமாக திரும்பப் பெறப்பட்டதன் காரணமாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பைடனின் புகழ் குறையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x