

லக்னோ: பாஜகவில் இணைந்த பிறகு நேற்று லக்னோ திரும்பிய அபர்ணா யாதவ், தனது மாமனார் முலாயம் சிங் யாதவை சந்தித்து, அவரது ஆசிகளைப் பெற்றார்.
உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உ.பி. முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் கடந்த புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று காலை லக்னோ திரும்பிய அபர்ணா, தனது மாமனார் முலாயம் சிங் யாதவை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றார்.
இதுகுறித்து அபர்ணா யாதவ் தனது ட்விட்டர் பதிவில், “பாஜக உறுப்பினரான பிறகு லக்னோ திரும்பியவுடன் தந்தையிடமிருந்து ஆசிகளை பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். முலாயம் சிங்கிடம் ஆசி பெறும் புகைப்படம் ஒன்றையும் அவர் தனது பதிவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அபர்ணா யாதவ் மற்றொரு பதிவில், “பாஜகவில் இணைந்த பிறகு டெல்லியை விட்டுப் புறப்பட்டு லக்னோ விமான நிலையத்தை அடைந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இவ்வளவு பெரிய அளவில் வந்து என்னை ஊக்கப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அபர்ணா பாஜகவில் இணைந் ததற்கு சமாஜ்வாதி தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் வாழ்த்து தெரிவித்தார். அபர்ணாவை சமாதானப்படுத்த முலாயம் சிங் நிறைய முயற்சி செய்ததாக அவர் செய்தியாளர் களிடம் கூறினார்.
தொடர்ச்சியாக உ.பி. பாஜக வில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டிருந்த நேரத்தில் அபர்ணா பாஜகவில் இணைந்தது அக்கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.