

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராஜீவ் பிரதாப் ரூடி, காங்கிரஸ் கட்சியை 'மாநிலக் கட்சி' என்று அழைத்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவையில் ரூடி பேசும்போது, "ஒரு தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை மாநிலக் கட்சி நிலைமைக்கு வந்ததை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இருப்பினும், நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது எதிர்கட்சியுடன் கலந்தாலோசிக்கப்படும்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நாட்டில் 65 ஆண்டுகளாக தவறான ஆட்சி நடத்தியதற்காக மக்கள் அளித்த தண்டனையே இது.
மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் இல்லை என்பதால், ஊழல் கண்காணிப்பு ஆணையர், சிபிஐ இயக்குநர், லோக்பால் நியமனங்களில் எதிர்கட்சி என்ற வகையில் காங்கிரஸ் பங்கேற்க முடியாது.
பாஜக எதிர்கட்சியாக இருந்த போது, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பல நல்ல முக்கிய யோசனைகளை அவ்வப்போது அளிப்பார். ஆனாலும், அதனை புறக்கணித்து விட்டு பிரதமர் தனது முடிவை அறிவிப்பார். ஆனால் எங்கள் பிரதமர் தாராள மனம் படைத்தவர். எனவே முக்கிய முடிவுகளில் எதிர்கட்சியின் பங்களிப்பை அவர் ஊக்குவிப்பார்" என்றார்.
ராஜீவ் பிரதாப் ரூடியின் இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் அமைதி காக்கும்படி அறிவுறுத்தினார்.
திரிணாமூல் மற்றூம் இடதுசாரி உறுப்பினர்களும், ராஜீவ் பிரதாப் ரூடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மட்டுமே பேச வேண்டும் என்றும் அதை விடுத்து பேச்சை திசை திருப்பக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.