

பனாஜி தொகுதி மறுக்கப்பட்டதால் பாஜகவிலிருந்து முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உட்பல் பாரிக்கர் விலகினார். கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கோவா ஃபார்வேர்ட கட்சியானது காங்கிரஸுடனும், மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சியானது திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்துள்ளன. ஆதலால், பாஜகவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
கோவாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.
அதற்குப் பதிலாக வேறு இரண்டு இடங்களைக் கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள மனோகர் பாரிக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த உட்பல் பாரிக்கர் பாஜகவிலிருந்து விலகினார். இது குறித்து அவர், பனாஜி தொகுதி மக்களின் ஆதரவுக்கு எனக்கு இருப்பதை எடுத்துக் கூறி கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்துவிட்டேன். கடந்த முறைதான் எனக்கு சீட் மறுக்கப்பட்டது என்றால் இந்த முறையும் மறுத்துள்ளனர். எனக்கு சீட் மறுத்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு வெற்றி பெற்றபின் கட்சி தாவியவருக்கு பனாஜி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் கட்சியிலிருந்து விலகியுள்ளேன். பனாஜி மக்கள் எனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், பாரிக்கர் முதல்வராக நியமிக்கப்பட்டால் பாஜகவுக்கு ஆதரவு தருகிறோம் என எம்ஜிபி, கோவா ஃபார்வேர்ட் கட்சிகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார். ஆனால் அவர் 2019ல் உயிரிழந்தார். இடைத்தேர்தலிலேயே பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அப்போது அளிக்கப்படவில்லை. இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.