

ஹைதராபாத்: இந்து மதத் துறவியும், சமூக சீர்திருத்தவாதியுமான ராமானுஜரின் 216 அடி சிலையை பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஹைதராபாத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த இந்து மதத் துறவி ராமானுஜர். தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், உலகமெங்கும் சமத்துவம் பரவ, தீண்டாமை ஒழிய பாடுபட்டார். வைஷ்ணவ குருமார்களில் முக்கியமானவரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத்தில் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. 'சமத்துவத்துக்கான சிலை' (Statue of Equality) என வர்ணிக்கப்படும் இதனை பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
சிறப்பம்சங்கள்: இந்த சிலை முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடைகளை பெற்று சுமார் ரூ.1,000 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்த பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு இந்த சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான 'பஞ்சலோஹா' சிலையாக நிறுவப்பட்டுள்ளது. ராமானுஜர் சிற்பம் மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்து வருகிறது. இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை ராமானுஜரின் 216 அடி சிலை பெறவுள்ளது.
சிலை அமைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் இந்த வளாகத்தில்108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள், தமிழ் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணு கோயில்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதே வளாகத்தில் 'பத்ரா வேதி' என பெயரிடப்பட்ட 54 அடி உயர அடித்தள கட்டிடம், வேதங்களுக்கான டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், பண்டைய இந்திய நூல்கள் அடங்கிய நூலகம், ஒரு கல்விக் கூடம் ஆகியவற்றுடன் ஒரு தியேட்டர் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
ராமானுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. திறப்பு விழா அன்று சிலை வளாகத்தில் 1,035 யாகம் உட்பட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. பிப்ரவரி 2 முதலே ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடங்கும் என்றும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், புகழ்பெற்ற ஆன்மிக குரு சின்ன ஜீயர் சுவாமியுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் சிலையின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.