Published : 21 Jan 2022 02:08 PM
Last Updated : 21 Jan 2022 02:08 PM

கோவா: முதல்வர் வேட்பாளர் தேர்வும்; ஆம் ஆத்மியின் சாதியக் கணக்கீடுகளும்

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி சாதி அரசியல் செய்கிறது என்று முதல்வர் வேட்பாளர் தேர்வு மூலம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதனை அரவிந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்.14-ம் தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனது பலத்தை நிருபிக்கத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ள, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். 46 வயதான இந்த அமித் பலேகர் ஒரு வழக்கறிஞர். விலங்கியல் படிப்பு முடித்த பிறகு சட்டம் பயின்றவர். வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஆரம்ப நாட்களில் தன்னிடம் வருபவர்களிடம் பழங்களை மட்டும் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு வழக்குகளில் வாதாடியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்கள் முன்பு, ஆம் ஆத்மியில் இணைந்த அமித் பலேகர் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் அவரின் அரசியல் செயல்பாடு, குடும்ப செல்வாக்கு ஆகியவை சொல்லப்பட்டாலும், அதைத் தாண்டி அவரின் சாதிப் பின்புலம் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அமித், பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் மொத்த மக்கள்தொகையில் 35 சதவீதம் பேர் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், இதுவரை இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒரே ஒரு முறை மட்டுமே, கோவாவின் முதல்வராக இருந்துள்ளார்.

இதுவரை 13 பேர் 24 முறை கோவாவின் முதல்வராக இருந்துள்ளனர். இந்த 13 முதல்வர்களில் ரவி நாயக் மட்டுமே பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் 1991 - 93ஆம் ஆண்டு மற்றும் 94ஆம் ஆண்டு என இரண்டு முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவி வகித்த ஆண்டுகளைக் கணக்கிட்டால் இரண்டரை வருடங்கள் மட்டுமே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பண்டாரி சமூக மக்கள் மத்தியில் தங்கள் சமூகத்துக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

இந்த அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகவே, பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த அமித்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி. கடந்த நவம்பர் மாதம் கோவாவில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அன்றே கேஜ்ரிவால், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவரும், துணை முதல்வர் வேட்பாளராக கத்தோலிக்க கிறிஸ்தவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல்வர் தேர்வை வைத்து, ஆம் ஆத்மி கட்சி சாதி அரசியல் செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. அமித் பலேகரை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, "பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் புறக்கணிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சியும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் ஆக்கவில்லை. இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார். அவரும் இரண்டரை வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். நாங்கள் சாதி அரசியல் செய்யவில்லை. மாறாக, மற்ற அரசியல் கட்சிகள் முன்பு விளையாடிய சாதி அரசியலை இப்போது நாங்கள் சரிசெய்து வருகிறோம்" என்று பதில் தெரிவித்தார்.

முன்னதாக, 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி அப்போது, கத்தோலிக்க கிறிஸ்தவரான எல்விஸ் கோம்ஸ் என்பவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. அந்தத் தேர்தலில், கோம்ஸ் படுதோல்வி அடைந்ததோடு கோவாவில் ஆம் ஆத்மி தனது கணக்கைத் திறக்க முடியாமல் போனது. இதனிடையே, கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அக்கட்சிக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் வென்று ஆம் ஆத்மி கோவாவில் தங்களின் வருகையைப் பதிவு செய்தது. இதே தெம்பில் சட்டப்பேரவையில் நுழைந்துவிட வேண்டும் என உழைக்கத் தொடங்கியுள்ளது.

அதற்கான முதல்படியாகத்தான், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான பண்டாரி சமூகத்தைக் கையிலெடுத்துள்ளது. பாரம்பரியமாக பாஜக ஆதரவாளர்களாக இருந்து வரும் பண்டாரி சமூக வாக்குகளை இம்முறை ஆம் ஆத்மிக்கு மடைமாற்றும் முயற்சியாக, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு பார்க்கப்படுகிறது. மற்ற முக்கியக் கட்சிகளான பாஜக மராட்டிய சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த பிரமோத் சாவந்த்தையும் (தற்போதைய முதல்வர்), காங்கிரஸ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த திகம்பர் காமத் என்பவரையும், திரிணமூல் காங்கிரஸ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுடின் தவாலிகர் என்பவரையும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x