உத்தரப் பிரதேச தேர்தல்: இன்று இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர் ராகுல், பிரியங்கா

உத்தரப் பிரதேச தேர்தல்: இன்று இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர் ராகுல், பிரியங்கா
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (ஜன.21) வெளியிடுகின்றனர்.

இது தொடர்பாக இன்று கட்சி தலைமையகத்தில் பிரியங்காவும், ராகுலும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டும் உத்தரப் பிரதேசத் தேர்தலில் 403 இடங்களில், காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தப் படுதோல்வியிலிருந்து மீண்டே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் காங்கிரஸ் இம்முறை தேர்தல் களத்தை அணுகுகிறது. ஆகையால் இளைஞர்களையும், பெண்களையும், சிறுபான்மையினர், பட்டியலின மக்களையும் நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது.

தேர்தலில் 40% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். காங்கிரஸ் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 125 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் 50 பேர் பெண்கள். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. 41 வேட்பாளர்களை கொண்ட இந்தப் பட்டியலில் 16 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தனிக் கவனம் செலுத்தி வருகிறார். ஹத்ராஸ் சம்பவம் தொடங்கி உ.பி.யில் எங்கெல்லாம் பட்டியலின மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்ததோ அங்கெல்லாம் அம்மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

பெண்களைக் கவர ஏற்கெனவே பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்நிலையில் இன்று வெளியாகும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in