

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அசோக் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் 500-க்கும் குறைவாகவே கரோனா தொற்று பதிவாகிறது. ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து அதன்பிறகு படிப்படியாக குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில் தற்போதைய கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் வீட்டில் இருந்தவாறே, மாத்திரைகள் மூலம் குணமடைந்து விடுகின்றனர்.
நாளுக்குநாள் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது.
இவ்வாறு ஆர்.அசோக் தெரிவித்தார்.