Published : 21 Jan 2022 07:10 AM
Last Updated : 21 Jan 2022 07:10 AM

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கட்டணம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும் புதிய முறை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை அவர் கேட்டு வருகிறார். முந்தைய பட்ஜெட்டில் ஏற்பட்ட குறைகள் மற்றும் வரும் பட்ஜெட்டில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து அவர் ஆலோசனைநடத்துவது வழக்கம். அந்த வகையில் வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்ற பரிந்துரையும் அவரது பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வருமான வரி தாக்கல் செய்வோரில் 8,600 பேர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் என குறிப்பிடுகின்றனர். தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகம் என தெரிவிப்போர் எண்ணிக்கை 42,800. நான்கு லட்சம் மக்கள் தங்களது வருமானம் ரூ.20 லட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கின்றனர். 2,200 டாக்டர்கள், சார்டர்ட் அக்கவுன்டன்ட், வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில்புரிவோர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகம் என்று கூறுகின்றனர்.

வருமான வரியில் 63 சதவீததொகை 1 சதவீதம் பேரிடமிருந்துதான் வசூலாகிறது. இதனடிப்படையில் பார்க்கும்போது 99 சதவீதம் பேர் மிகக் குறைவான அளவிலேயே வரி செலுத்துகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 1.46 கோடி தனி நபர்கள் வருமான வரிசெலுத்துகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையாகும். 2020-21-ம் நிதி ஆண்டில் மொத்தம் வசூலான வரி வருவாய் ரூ.24,23,020 கோடி. இதில் வருமான வரி மூலம் வசூலான தொகை ரூ.6,38,000 கோடி. இது மொத்த வரி வசூலில் 26.30 சதவீதமாகும். நிறுவனங்களின் வரி ரூ.6,81,000 கோடி (28%). ஜிஎஸ்டி வசூல் ரூ.6,90,500 கோடி (28.5%). உற்பத்தி வரி ரூ.2,67,000 கோடி (11%). சுங்க வரி ரூ.1,38,000 கோடி (ரூ.5.70%), சேவை வரி ரூ.1,020 கோடி (0.045%).

பெரும்பாலானவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர். இதில் சிலர் எவ்வித வரியும் செலுத்துவது இல்லை. வருமான வரி சட்டம் 87ஏ பிரிவு அறிமுகமானதிலிருந்து வரி வரம்பிலிருந்து அதிகம் பேர் வெளியேறியுள்ளனர்.

வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய குறைந்தபட்ச கட்டணம் தனி நபர்களுக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கவும், நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்குரூ.3 ஆயிரம் கோடி வருமானம்கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம் தேவையின்றி வரி படிவம் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இதன் மூலம்குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x