Published : 29 Apr 2016 03:06 PM
Last Updated : 29 Apr 2016 03:06 PM

சுகாதாரத் துறை மீதான மத்திய அரசின் அலட்சியப் போக்கு: நாடாளுமன்ற நிலைக்குழு கவலை

சுகாதாரத் துறைக்கு திட்டமிட்டபடி தொகையை வழங்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதால் நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

12-ம் ஐந்தாண்டு (2012-17) திட்டத்தின் கீழ் உண்மையில் ஒதுக்கப்பட்ட தொகையில் 45% தொகைதான் அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

நிதிநிலை போதாமை காரணமாக நாட்டு மக்களின் ஆரோக்கியம் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டம் நிறைவடையும் போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்துறைக்கு 2.5% முதலீடு செய்யும் இலக்கை மத்திய அரசு தற்போது எட்டவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, காரணம் இனி 147% அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை எட்ட முடியும். இது இப்போதைய நிலமையில் சாத்தியமில்லை என்கிறது நிலைக்குழு.

இந்த கமிட்டிக்குத் தலைவரான சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் கூறும்போது, “திட்டமிட்ட நிதி ஒதுக்கீட்டிற்கும் உண்மையில் வழங்கிய தொகைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் இலக்கில் 1.2% தான் இதுவரை அரசு செலவு செய்துள்ளது” என்றார்.

இந்திய பொதுச்சுகாதார அறக்கட்டளை தலைவர் கே.ஸ்ரீநாத் ரெட்டி எச்சரித்த போது, “கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு அரசு செலவிட்ட தொகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு காரணமாக தேசிய சுகாதாரக் கொள்கை, குறிப்பாக அன்றாடம் ஏழை மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முதன்மை சுகாதாரப் பராமரிப்பு அரசின் அலட்சியம் காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளது. வளர்ச்சி நோக்கிய பொருளாதாரம் பற்றி பேசிவரும் போது நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்த அலட்சியம் இனிமேலும் தொடரக்கூடாது. இந்திய மக்களுக்கு தேவைப்படும் உடனடியான ஆரோக்கிய, உடல்நலச் சேவைகளை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் விழிப்படைய வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார். இவர் திட்டகமிஷன் நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசு நிதி நெருக்கடிகளில் உள்ள போதும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத் துறையின் மேல்தான் சிக்கனம் காட்டுகின்றனர் என்று நிபுணர்கள் பலர் சாடியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x