Last Updated : 20 Jan, 2022 06:44 PM

 

Published : 20 Jan 2022 06:44 PM
Last Updated : 20 Jan 2022 06:44 PM

மேற்கு வங்க பாஜகவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து வெளியேறிய தலைவர்கள் - அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம்

மத்திய இணை அமைச்சர் சாந்தனூ தாக்கூர்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள்வெளியேறியுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜகவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து அதன் தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இவர்களில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ரகசியமாகக் கூடி ஆலோசிக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல பாஜக தீவிரம் காட்டியிருந்தது. ஆனால், அங்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் படுதோல்வி அடைந்தது. இதில் மூன்றாவது முறையாக மம்தா முதல்வராகத் தொடர, பாஜகவிற்கு 77 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இவர்களில் 10 எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அம்மாநில பாஜகவின் வாட்ஸ் அப் குழுமத்திலிருந்து வெளியேறத் துவங்கினர்.

மேற்கு வங்க அரசியலில் அக்கறையற்ற பாஜக தலைமை: இதற்கு தேர்தலில் தோல்விக்கு பின் பாஜக தலைமை, மேற்கு வங்க மாநில அரசியலில் அக்கறை செலுத்துவதில்லை எனப் புகார் எழுந்தது. தேர்தலுக்கு பின் புதிதாக அமர்த்தப்பட்ட அம்மாநில நிர்வாகிகள் மீதும் அதிருப்தியும் கிளம்பி இருந்தது. இதனால், சில நாட்களுக்கு முன், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சரான சாந்தனு தாக்கூரும் வாட்ஸ் அப் குழுமத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இதற்கு முன்பும் அமைச்சர் சாந்தனு, குடியுரிமைப் பாதுகாப்பு சட்டம், (சிஏஏ) உடனடியாக நிறைவேற்றவில்லை என மத்திய அரசின் மீது தேர்தல் சமயத்தில் புகார் கூறியவர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து தலைவர்கள் வெளியேறுவது அதிகரித்தது. இந்த செயல் அவர்களது அதிருப்தியை தன் தலைமைக்கு காட்டியது. இவர்களில் சுமார் 30 பேர் கொல்கத்தாவில் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக மறுப்பு: இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் மேற்கு வங்க பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''பாஜகவை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அல்ல இது. எங்கள் மாநிலத்தில் பாஜகவைக் காத்து, மேலும் எப்படி வளர்ப்பது என ஆலோசிக்க உள்ளோம். எங்கள் கட்சியில் சில தலைவர்கள் இங்கு உளவாளியாக செயல்பட்டு பாஜகவை, ஆளும் திரிணமூல் காங்கிரஸிடம் விற்க முயல்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு தலைமையிடம் புகார் செய்வோம்'' எனத் தெரிவித்தனர்.

மத்துவாஸ் சமூகத்தினரின் அதிருப்தி: மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய சமூகத்தினரான மத்துவாஸ்களுக்கு பாஜகவின் புதிய நிர்வாகத்தில் இடமளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மத்துவாஸ் சமூகத்தினர் இணைந்து அம்மாநிலத்தில் புதிதாக பிரச்சினை செய்வதாகக் கருதப்படுகிறது. இதே காரணத்திற்காக பிரச்சினை செய்பவர்களில் ஒருவராக மத்திய இணை அமைச்சரான சாந்தனு தாக்கூரும் இருப்பதாகத் தெரிகிறது. இவரும் மத்துவாஸ் சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x