

புதுடெல்லி: ஐ.நா. உறுப்பு நாடுகள் சில, தங்கள் அரசியல், மதம், சுயநல ஆதாயங்களுக்காக, தீவிரவாத அமைப்புகளை இனரீதியான அடிப்படைவாதம், வலதுசாரித் தீவிரவாதம் என வகைப்படுத்துவது ஆபத்தானது என ஐ.நா.வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார்.
ஐ.நா. சர்வதேச தீவிரவாத தடுப்பு கவுன்சில் சார்பில் சர்வதேச தீவிரவாத தடுப்பு கருத்தரங்கு நடந்தது. ஐ.நா.வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி தலைமையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2022 ஆம் ஆண்டுக்கான தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக திருமூர்த்தி பதவி வகித்து வருகிறார். கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசியதாவது:
தீவிரவாதம் எங்கு செயல்பட்டாலும், அது உலகின் பிற இடங்களிலும் அமைதி, பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கச் செய்யும். அதனால்தான், கடந்த காலங்களில் பல உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகளை தங்களுக்குச் சாதகமானவை, பாதகமானவை என்று வகைப்படுத்திவந்த காலம் முடிவுக்கு வந்தது. எந்த வடிவில் இருந்தாலும் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கது.
2001, செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வானது, உலகளாவிய தீவிரவாதத் தடுப்புப் பணியில் நமது அணுகுமுறையை மாற்றியமைக்கும்படி செய்தது. அந்தப் தாக்குதல், சர்வதேச அளவில் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் இருப்பதைத் தெளிவுபடுத்தியதுடன், உலக நாடுகள் ஒன்றிணைந்து அதை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது.
தீவிரவாதத்தை மதம், நாடு, நாகரிகம், இனக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது.ஐ.நா. உறுப்பு நாடுகள் சில, தங்கள் அரசியல், மதம், சுயநல ஆதாயங்களுக்காக, தீவிரவாத அமைப்புகளை இனரீதியான அடிப்படைவாதம், வலதுசாரித் தீவிரவாதம் என வகைப்படுத்துவது ஆபத்தானது. இது மீண்டும் தீவிரவாத தாக்குல்கள் தொடரவே வழிவகுக்கும்.
மதவெறியின் சமகால வடிவங்கள், குறிப்பாக இந்து எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான போபியாக்களின் தோற்றம் தீவிர கவலைக்குரிய விஷயம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐ.நா. மற்றும் அனைத்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
பல நாடுகளில் இந்து எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விஷமப் பிரச்சாரத்தை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. மதத்தின் அடிப்படையில் உலக அமைப்பு பக்கம் செல்வதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐஎஸ் போன்ற அமைப்புகள் தங்கள் கவனத்தை மாற்றிக் கொண்டுள்ளன. சிரியா, இராக் நாடுகளை மீண்டும் கைப்பற்றும் திட்டத்தில் அவை உள்ளன. அந்த அமைப்புகளின் துணை அமைப்புகளும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் தங்களை விரிவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அல்கொய்தா அமைப்புக்கு மீண்டும் வலிமையைத் தந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பட்டியலிடப்பட்டுள்ள, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்- இ- முகமது போன்ற அமைப்புகளுடனான அல்கொய்தாவின் தொடர்புகள் வலுப்பெற்று வருகின்றன.
கடந்த, 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த பயங்கரவாத கும்பலுக்கு பாகிஸ்தான் தஞ்சமளித்து, பாதுகாப்பு வழங்கியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சில உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலிமைப்படுத்துவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதத் தடுப்புக் குழுவின் முக்கியப் பணியாகும். அதற்கு அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.