Published : 20 Jan 2022 11:42 AM
Last Updated : 20 Jan 2022 11:42 AM

அருணாச்சலப் பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல்; பிரதமர் மோடிக்குக் கவலையில்லை: ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த 17வயதுச் சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தில் லுங்டா ஜோர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மிராம் தாரன். இந்தச் சிறுவனை சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்குள் வரும் சாங்போ ஆற்றுப் பகுதியில் வைத்து கடத்திச் சென்றனர்.

இதைப் பார்த்த அந்தச் சிறுவனின் நண்பர் ஜானி யாயிங் இதுகுறித்து ஊர் மக்களுக்குத் தகவல் அளித்தார். ஊர் மக்கள் இந்திய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அந்தச் சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச எம்.பி. தபிர் காவோ அளித்த பேட்டியில், “மிராம் தாரோன் அவரின் நண்பர் ஜானி இருவரும் சாங்போ ஆற்றங்கரையில் சீன ராணுவ வீரர்களால் கடத்தப்பட்டனர்.

ஆனால், சீன ராணுவத்திடம் இருந்து ஜானி தப்பித்து வந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதுவரை நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்கவில்லை. மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் விரைவாகச் செயல்பட்டு சிறுவனை மீட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிறுவன் மிராம் தாரன்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், இந்தச் சிறுவனை விரைவாக மீட்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “குடியரசு தினத்துக்கு சில நாட்களுக்கு முன், இந்தியாவின் எதிர்காலமாகிய அருணாச்சலப் பிரதேச சிறுவனை சீன ராணுவம் கடத்தியுள்ளது.

இந்த நேரத்தில் சிறுவன் மிராம் தாரோன் குடும்பத்தாருடன் காங்கிரஸ் துணை நிற்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள் தாரன், தோல்வியை ஏற்கமாட்டோம். பிரதமர் மோடி மவுனம் காப்பது, அவர் இந்தச் செயலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதுபோல் தெரிகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 சிறுவர்களை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்று ஒரு வாரத்துக்குப் பின் விடுவித்தனர். அதே ஆண்டு மார்ச் மாதம் 21 வயது இளைஞர்களைக் கடத்திச் சென்ற ராணுவத்தினர், இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டதையடுத்து விடுவித்தனர்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் சீனா பாலம் கட்டி வருகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நம்முடைய தேசத்தில் சட்டவிரோதமாக சீனா பாலம் கட்டுகிறது. பிரதமர் மோடி மவுனம் காப்பதால், சீன ராணுவத்தின் துணிச்சல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது, இந்தப் பாலத்தைத் திறந்துவைக்கக் கூட பிரதமர் வரமாட்டார் போல் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x