Published : 20 Jan 2022 06:31 AM
Last Updated : 20 Jan 2022 06:31 AM

உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் சொகுசு கார் வாடகையாக ரூ.21 ஆயிரம்; டீ, சமோசாவுக்கு தலா ரூ.6 செலவிடலாம்: லக்னோ மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

லக்னோ: உ.பி.தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் டீ, சமோசாவுக்கு தலா ரூ.6, சொகுசு கார்களுக்கு தினசரி வாடகையாக ரூ.21 ஆயிரம் மட்டுமே செலவிடலாம் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப செலவு செய்து வந்தனர். இதனால், வசதி படைத்தவர்கள் வெற்றி பெறுவதாகவும் வசதி குறைவானவர்கள் தோல்வி அடைவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுக்கான உச்சவரம்பை தேர்தல் ஆணையம் நிர்ணயித்தது. செலவு கணக்கை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்வதையும் கட்டாயமாக்கியது.

உ.பி., பஞ்சாப் உட்பட 5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு உச்ச வரம்பை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியது தேர்தல் ஆணையம்.

இதன்படி, வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது எதற்கு எவ்வளவு தொகை செலவிடலாம் என்ற பட்டியலை உ.பி.யின் லக்னோ மாவட்டதேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

காலை சிற்றுண்டிக்காக ரூ.37, சமோசா, டீ ஆகியவற்றுக்கு தலா ரூ.6 செலவிடலாம். ஒரு மீட்டர் பூ மாலை ரூ.16 விலையில் வாங்கலாம். பிரச்சாரத்துக்காக ஒருவரின் தினசரி கூலி ரூ.1,575 வீதம் 3 மேளக்காரர்களை வைத்துக் கொள்ளலாம்.

பிஎம்டபிள்யு, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு தினசரி வாடகையாக ரூ.21 ஆயிரமும் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் கார்களுக்கு ரூ.12,600 வரையிலும் செலவிடலாம். இன்னோவா, பார்ச்சூனர், குவாலிஸ் கார்களுக்கு ரூ.2,310-ம் ஸ்கார்பியோ, டவேரா கார்களுக்கு ரூ.1,890-ம், ஜீப், பொலீரோ, சுமோகார்களுக்கு ரூ.1,260-ம் எரிபொருள் உட்பட தினசரி வாடகை தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x