பெங்களூரு அருகே நடுவானில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு: 426 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பெங்களூரு அருகே நடுவானில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு: 426 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட‌து. இதனால் அதில் பயணித்த 426 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 7-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ஒரு இண்டிகோ விமானம் வடக்கு ஓடுதளத்திலும், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்லும் இன்னொரு இண்டிகோ விமானம் தெற்கு ஓடுதளத்திலும் பறக்க தயாராக இருந்தன. இந்த இரு விமானங்களிலும் பணியாளர்கள் 12 பேருடன் சேர்த்து 426 பேர் இருந்தனர்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் ஒரு விமானத்துக்கு வடக்கு ஓடுதளத்திலும், இன்னொரு விமானத்துக்கு தெற்கு ஓடுதளத்திலும் புறப்பட ஒரே நேரத்தில் சமிக்ஞை வழங்கினர். இதையடுத்து இரு விமானங்களும் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து ஒன்றை ஒன்று நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த‌ விமான நிலைய ரேடார் குழு அதிகாரிகள், 2 விமானங்களின் பைலட்டுகளுக்கும் அவசர தகவல் கொடுத்தனர். இதனால் நேருக்கு நேராக மோத இருந்த கொல்கத்தா விமானம் இடது பக்கமும், புவனேஸ்வர் விமானம் வலது பக்கமும் திரும்பின‌. இதனால் நடுவானில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஓடுதள செயல்பாடுகளுக்கான பொறுப்பாளர் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் வடக்கு ஓடுபாதையை பயன்படுத்த முடிவு செய்ததே இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தெற்கு ஓடுதளம் மூடப்பட்டது குறித்து தெற்கு கோபுர கட்டுப்பாட்டாளருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே தெற்கு கோபுர கட்டுப்பாட்டாளர் கொல்கத்தா செல்லும் விமானத்தை புறப்பட அனுமதித்துள்ளார்.

இதை அறியாமல் புவனேஸ்வர் செல்லும் விமானம் புறப்பட வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளரும் அனுமதி அளித்தார். தெற்கு மற்றும் வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளர்களின் சமிக்ஞை ஒருங்கிணைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிவில் ஏவியேசன்டிஜி அருண்குமார் கூறும்போது, ''விசாரணை நடை‍பெற்றுவருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க‌ப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in