

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 1920-ம் ஆண்டு கல்லகூரி நாராயண ராவ் எழுதி, இயக்கிய சிந்தாமணி எனும் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில், அந்த காலத்திலேயே பெண் சுதந்திரத்தை ஊக்குவித்தல், மூட நம்பிக்கை ஒழித்தல் மற்றும் பல சமூக அவலங்களை இந்த நாடகம் வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் இந்த நாடகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து 100 ஆண்டுகளாக இந்த நாடகம் அரங்கேறியது.
இந்த நாடகத்தில் சுப்பி செட்டி, சிந்தாமணி, பில்வ மங்களுடு, பவானி சங்கரம், ஸ்ரீஹரி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இந்த கதாபாத்திரங்களில் சில சுப்பி செட்டி கதாபாத்திரத்தை கிண்டல் செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நாடகத்தை ரத்து செய்யுமாறு அரசுக்கு கடிதங்கள் எழுதினர். இதனால், ஆந்திர அரசும் கடந்த 17-ம் தேதி சிந்தாமணி நாடகத்தை தடை செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நாடக சபாவினர், ஆட்சேபனைக்குரிய வசனங்களையோ அல்லது கதாபாத்திரங்களையோ நீக்க தயாராக இருக்கிறோம். ஆனால், 100 ஆண்டு புகழ் பெற்ற நாடகத்தை திடீரென ரத்து செய்ததால், இதனை நம்பி இருக்கும் பலர் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டு உள்ளது. ஆதலால், தயவு செய்து ஜெகன் அரசு தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.