

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆனையடி நரசிம்ம மூர்த்தி கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் யானை அணி வகுப்பு நேர்ச்சையான ‘கஜ மேளா’வுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் துலாபார நேர்ச்சை செலுத்தியிருந்தார். இப்போது முதல்வர் ஸ்டாலின் பெயரிலேயே நேர்ச்சைத் தொகை கட்டப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆனையடி பகுதி யில் நரசிம்ம மூர்த்தி கோயில் உள்ளது. ஆனையடி என்ற சொல்லுக்கே யானையின் கால் தடம் என்று அர்த்தம். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம மூர்த்தியை மூலவராகக் கொண்ட கோயில் இது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இங்கு நடக்கும் ஆனையடி பூரத்தின் மைய நிகழ்வான ‘கஜ மேளா’ நிகழ்வு மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவில் விநாயகரின் உருவமாக பார்க்கப்படும் யானைகளை வணங்கி மரியாதை செய்து, அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்த அணிவகுப்பில் 80 யானைகள் பங்கேற்று வந்த நிலையில், நிகழாண்டில் கரோனா கால நடைமுறைகளைப் பின்பற்றி 10 யானைகள் மட்டுமே பங்கேற்கின்றன.
இந்த ஆண்டுக்கான கஜமேளா நிகழ்ச்சி 31-ம் தேதி நடக்கிறது. இதில் ஆறாவது யானைக்கான கட்டணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் கட்டப் பட்டுள்ளது. இதற்கென ரூ.9,000 கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் நரசிங்கமூர்த்தி கோயிலின் சார்பில் அச்சடித்து விநி யோகிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளைத் தலைவர் வேணு கோபால் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், ‘‘கடந்த மாதம் தொலைபேசியில் எங்களிடம் பேசியவர், யானை அணி வகுப்புக்கு பணம் கட்டுவதற்கான விதிமுறைகள் குறித்துக் கேட்டார். அப்போதே மு.க.ஸ்டாலின் பெயரில் யானை நேர்ச்சை செய்ய வேண்டும் என்றார்கள். நாங்கள் யாரோ விளையாட்டாக பேசுகிறார்கள் என்று நினைத்தோம். ஒருவாரத்திற்கு பின்பு இருவர் நேரில் வந்து பணம் கட்டினார்கள். அதிலும் யானை அணிவகுப்பில் 6-வது யானைதான் வேண்டும் என கேட்டு பணம் கட்டினார்கள்’’என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் (17 ஆம் தேதி) குருவாயூர் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் ரூ.9,200 பணத்தை தானே கோயில் அலுவலகத்தில் செலுத்தி துலாபார நேர்ச்சை செய்தார். அவரது எடைக்குச் சமமான நாட்டுச் சர்க்கரையை கோயிலுக்கு வழங்கினார். அதேபோல் சுற்று விளக்குகளை எரியச் செய்ய இணைய வழியில் முன்னரே 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருந்தார். அதில் துர்கா ஸ்டாலின் நேரடியாக வந்திருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
ஆனால் இப்போது முதல்வர் பெயரில் ஆனையடி பகுதியில் வசிக்கும் சுலதா என்னும் பெண் தமிழகத்தில் இருக்கும் தன் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்போடு 9000 ஆயிரம் ரூபாய் நேர்த்திக்கடனுக்காக கட்டியுள்ளார். இவர் முதல்வர் குடும்பத்தினருக்கு தெரிந்துதான் ‘மு.க.ஸ்டாலின்’ பெயரில் பணம் கட்டினாரா? அல்லது மு.க.ஸ்டாலின் மீதுகொண்ட பிரியத்தால் நேர்ச்சைக்கு பணம் கட்டினாரா? என்ற விபரங்கள் தெரியவில்லை.