

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி அதை கைப்பற்றிய 20 வயது இளைஞர் திவ்யான்ஷு குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிஹாரின் வைஷாலியை சேர்ந்தவர்.
கடந்த மாதம் 8 மற்றும் 11 ஆம் தேதிகளில் லாலுவின் ஃபேஸ்புக் பக்கம் ஊடுருவப்பட்டு திடீரென ஹேக் செய்யப்பட்டது. இத்துடன், லாலுவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பல தவறான விஷயங்களும் படங்களுடன் அப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மீது லாலுவின் இளைய மகனும் பிஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ், பாட்னாவில் உள்ள தலைமை செயலகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதில், லாலுவின் ஃபேஸ்புக் பக்கம் உடனடியாக விலக்கப்பட்டதுடன், வழக்கை பொருளாதாரப் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் சிறப்புப் படை தலைமை அதிகாரியான ஜிதேந்தர்சிங் கங்குவார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தார்.
இந்நிலையில், வைஷாலி மாவட்டத்தின் பகவான்பூரின் பாட்னா சாஹிப் கல்லூரியின் மாணவன் கோலு என அழைக்கப்படும் திவ்யான்ஷு குமார் எனும் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். கணினி அறிவில் நன்கு தேர்ச்சி பெற்ற திவ்யான்ஷு சமூக இணையதளங்களின் தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து வைத்துள்ளார். இவர் மீது மோசடி சம்மந்தப்பட்டவையான ஐபிசி 419, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனது திறமைகளை பரிசோதிக்க வேண்டி மற்றவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் ஊடுருவுவது திவ்யான்ஷுவின் பொழுது போக்காக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றங்களை செய்ய பயன்படுத்திய இரு ஆண்ட்ராய்டு வகை கைப்பேசிகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், போலியான பெயரில் சிம் கார்டை பெற்று திவ்யான்ஷு பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால், அவருக்கு வேறு எதுவும் கிரிமினல் நடவடிக்கைகளில் மற்றும் சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதா எனவும், விசாரணை நடைபெற்று வருகிறது.