

புதுடெல்லி: நான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன் என்று அக்கட்சியில் இணைந்த முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் கூறினார்.
உ.பி. முதல்வர் யோகி அமைச்சரவையிலிருந்த முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட மூவரை சமாஜ்வாதிக்கு இழுத்திருந்தார் அகிலேஷ்சிங். இதற்கு பதிலடியாக தன் பங்கிற்கு இப்போது பாஜக, சமாஜ்வாதி குடும்பத்திலிருந்து அபர்னாவை இழுக்க முடிவு செய்தது.
இந்தநிலையில் அபர்னா யாதவ், இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எப்போதுமே தேசம் தான் முக்கியம். பிரதமர் மோடி செய்துள்ள பணிகள் என்னை ஈர்க்கின்றன. பிரதமர் மோடியை நான் மனமார பாராட்டுகிறேன்.
நான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் ஈர்க்கப்பட்டேன். நான் தற்போது நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவின் திட்டங்களால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டே வந்துள்ளேன். பாஜக வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்.
பிரதமர் மோடி, பாஜகவின் கொள்கைகள் குறித்து நான் எப்போதும் பேசி வருகிறேன். தேசிய சிந்தனைக்காக குரல் கொடுத்து வருகிறேன். தேசியம் என் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். நான் எதற்கும் முன்பும் எப்போதும் தேசத்தைப் பற்றியே நினைத்தேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்ய இயலாது. பாஜக தலைமை என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன்’’
என்று அவர் கூறினார்.