முலாயம் சிங் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்தார்

முலாயம் சிங் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்தார்
Updated on
1 min read

புதுடெல்லி: முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் டெல்லியில் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார்.

உ.பி.யின் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவியாக இருப்பவர் அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் தலைநகரான லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

ஆனால், காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு சென்று போட்டியிட்ட ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார் அபர்னா. இந்நிலையில், அபர்னா யாதவ் எந்நேரமும் பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் பரவின.

அபர்னாவின் தந்தையான ஹரி ஓம் யாதவ் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் ஏற்கெனவே பாஜகவில் இணைந்து விட்டார். இவர் மூலமாக பாஜக பேசி மகள் அபர்னாவை தம் கட்சிக்குள் இழுப்பதாக செய்திகள் வெளியாகின.

யோகி அமைச்சரவையிலிருந்த முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட மூவரை சமாஜ்வாதிக்கு இழுத்திருந்தார் அகிலேஷ்சிங். இதற்கு பதிலடியாக தன் பங்கிற்கு இப்போது பாஜக, சமாஜ்வாதி குடும்பத்திலிருந்து அபர்னாவை இழுக்க முடிவு செய்தது.

இந்தநிலையில் அபர்னா யாதவ், இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில் ‘‘முலாயம் சிங்கின் மருமகளை பாஜக வரவேற்கிறது.

முலாயம் சிங் யாதவின் மருமகளாக இருந்தாலும், அபர்னா யாதவ் அவ்வப்போது பல விஷயங்களில் தனது கருத்துக்களை சொந்தமாக வெளிப்படுத்தினார். அவர் பாஜக குடும்பத்தின் ஒரு பகுதியாக நாங்கள் உணர்ந்தோம். அகிலேஷ் யாதவால் தனது குடும்பத்தில் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in