Last Updated : 19 Jan, 2022 09:37 AM

 

Published : 19 Jan 2022 09:37 AM
Last Updated : 19 Jan 2022 09:37 AM

உத்தரப் பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: கட்சி வட்டாரம் தகவல்

லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் எனக் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் பாஜக யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால், அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அகிலேஷ் தற்போது ஆசம்கர் தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். முன்னதாக தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், ஒவ்வொரு தொகுதியையுமே தான் போட்டியிடும் தொகுதியாகக் கருதி கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் அகிலேஷ் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இன்று மதியம் 1 மணியளவில் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.

அகிலேஷ் சகோதரரின் மனைவி அபர்ணா யாதவ் இன்று யோகி முன்னிலையில் பாஜகவில் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அகிலேஷ் தேர்தலில் போட்டி என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2017 தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 403 இடங்களில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 45 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x