

புதுடெல்லி: எங்கும் கரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விமானம், ரயில்களில் பயணம் செய்வதற்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கரோனா இல்லை என்பதற்கான ஆர்டிபிசிஆர் அறிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்வதற்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் மாற்றுத் திறனாளி களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசுதாக்கல் செய்த பதில் மனுவில், “அனைவரும் கரோனா தடுப்பூசிசெலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கிறது. அதேநேரம் தடுப்பூசியை ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்த முடியாது. எங்கும் கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்என மத்திய அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டுநெறிமுறைகளில் குறிப்பிடப் படவில்லை.
மேலும் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடு களுக்கே சென்று தடுப்பூசி செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
- பிடிஐ