தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக பெண்களை சேர்க்காதது ஏன்? - மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக பெண்களை சேர்க்காதது ஏன்? - மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
2 min read

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக பெண்களை சேர்க்காதது ஏன் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் தேசிய பாதுகாப்பு அகாடமி செயல்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோர், ராணுவம், கடற்படை, விமானப் படையில் பணியில் சேருகின்றனர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் என இருமுறை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆக. 18-ல் உத்தரவிட்டது.

இதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் திருமணம் ஆகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தேர்வாணையம் அறிவித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 19 பெண்கள் உட்பட 400 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பரில் தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத்தேர்வு அறி விப்பு வெளியானது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 19 பெண்கள் உட்பட 400 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே பெண்களின் எண்ணிக்கையை குறைத்து நிர்ணயிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், போதிய அடிப்படை வசதிகளை செய்யும் வரை பெண்களின் எண்ணிக்கை வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வில் 19 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அண்மையில் வெளியிடப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பிலும் 19 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுந்தரேஷ் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, "போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தால் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நுழைவுத் தேர்வில் 19 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையை நிர்ணயித்தது ஏன்? இதுகுறித்து மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in