

மும்பை: கடற்படை கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 இந்திய கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள கடற்படைத் தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படை கமாண்ட் மண்டலத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்ற பின்னர் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கப்பலின் உள்பகுதியில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கடற்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உயிரிழந்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கப்பல் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் கப்பலில் உள்ள பொருட்கள் சேதமடைந்தது தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கப்பலில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு கடற்படை மண்டல தளத்திலிருந்து கிளம்பிய ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் விரைவில் தளத்துக்கு திரும்பவிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.