

பொதுவாக ஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கும் விற்பனையகங்களில் வாங்குவதற்கும் விலையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும். இதனாலேயே ஆன்லைன் மூலமாக பொருள்களை பலரும் வாங்குகின்றனர். ஆனால் தற்போது ஆப்பிள் ஐ போன் முதல் முறையாக ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் ஒரே விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரே சீரான விலையை விநியோகஸ்தர்கள் நிர்ணயித்ததே இதற்குக் காரணமாகும்.
விற்பனையகங்களில் ஸ்மார் ட்போன்களின் விற்பனை சரிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை விநியோகஸ்தர்கள் எடுத்துள்ளனர். ஆப்பிள் ஐ போன் பிரத்யேக விற்பனையகங்களில் இந்த நடைமுறையை அமல்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடல் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. ஆன்லைனில் அளிக்கப்படும் மிக அதிகமான தள்ளுபடி சலுகைகளால் ஆன்லைன் மூலமான விற்பனை அதிக அளவு உள்ளது. இதையடுத்து ஒரே சீரான விலையை நிர்ணயிக்க ஆப்பிள் முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சங்கிலித் தொடர் மின்னணு விற்பனையகத்தின் செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்கு மிகவும் போட்டியாகத் திகழும் சாம்சங் நிறுவனம் இதுபோன்ற ஒரே சீரான விலைப்பட்டியலை முன்னரே நிர்ணயித்துவிட்டது. இப்போது ஆப்பிள் நிறுவனமும் இதை நடைமுறைப்படுத்தியுள்ளதால் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் விற்பனை சீராக இருக்கும் என்று இத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் விநியோக உரிமையை இன்கிராம் மைக்ரோ, ரெடிங்டன், பீடெல் பிரைட்ஸ்டார் மற்றும் ராஷி பெரிபெரல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் பெற்றுள்ளன.
விலையைக் குறைக்கும் நடவடிக் கையை ஆப்பிள் நிறுவனம் எடுக்க வில்லை. இருப்பினும் அதிகபட்ச விற்பனை விலையில் எவ்வித மாற்ற மும் செய்யக் கூடாது என விநியோ கஸ்தர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.