Published : 18 Jan 2022 06:20 PM
Last Updated : 18 Jan 2022 06:20 PM

வீட்டில் இருந்து பணிபுரியும் முறையால் பெண்களுக்கான சுமை 3 மடங்கு அதிகரிப்பு: குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: "வீட்டில் இருந்தே பணிபுரியும் முறையால் பெண்களுக்கு மூன்று மடங்கு சுமைகளை அதிகரித்துள்ளது" என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா மூன்றாவது அலை தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி கேட்டுக் கொண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி, வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை நிறைய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது பெண்களுக்கு மூன்று மடங்கு சுமைகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மனோரமா இயர்புக் 2022-ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். "பெண்கள் ஏற்கெனவே ஊதியம் பெறும் வேலை மற்றும் ஊதியமில்லாத வேலைகளை (வீட்டு வேலை) செய்கின்றனர். இவற்றுடன் கரோனா நிலையால் பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பும் மூன்றாவது சுமையாக சேர்ந்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையால் இந்தப் பொறுப்பு பொதுவாக குழந்தையின் தாயை சார்ந்தே உள்ளது.

என்றாலும், பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற குடும்ப மன அழுத்தத்தை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையால் புதியதாக சந்திக்கும் ஆண்களை பாராட்டுகிறேன். தற்போது ஆண்களும் தங்கள் மனைவிகளின் சில பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், "கரோனா வைரஸால் மனிதனின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, ​​நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை கண்கூடாக பார்த்தோம். இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் பிரிவினைகளை விடுத்து மனிதத்தின் மூலமாகவே ஒன்று சேர முடியும் என்பதையும் கரோனா நமக்கு உணர்த்தியுள்ளது. அதற்கு சாட்சியே இந்த கரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் கைகோர்த்து நின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்வாய்ப்புகள் குறித்து அந்தக் கடிதத்தில், "ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக 20 வயதுக்கு மேல் தங்களின் தொழில் குறித்து சிந்திருப்பீர்கள். சமூகத் தேவைகளினால் அல்லது உங்களை சுற்றியுள்ளவர்களின் அழுத்தத்தினால் நம்மில் பலர் பெரும்பாலும் தொழிலை ஒரு வேலையுடன் ஒப்பிடுகிறோம். ஆனால் தொழிலை பொறுத்தவரை அது வேலை என்று அர்த்தம் இல்லை. புதிய நூற்றாண்டில், வேலை பற்றிய கருத்துகள் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. கரோனா இந்த மாற்றங்களை துரிதப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தங்களின் தனித்துவமான திறமைகளுக்கான சரியான அங்கீகாரத்தை பெற்றுள்ளனர்" என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x