Published : 18 Jan 2022 04:54 PM
Last Updated : 18 Jan 2022 04:54 PM

கிரிமினல் வழக்குகள் உள்ள 25 வேட்பாளர்கள் தேர்வு ஏன்?-பாஜக விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் முதல் இருகட்டத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் 25 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் முதல் இரு கட்டங்களுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 107 வேட்பாளர்கள் கொண்ட அந்தப் பட்டியலில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக உள்ள 63 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு 10 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 44 இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான சிராத்து தொகுதியில் களம் காண்கின்றார்.

இதனிடையே, இந்த 107 வேட்பாளர்களில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உட்பட 25 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மாநிலம் முழுவதும் அறியப்படும் பிரபலமான தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா 4 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இவரைப் போல கிரிமினல் வழக்குகள் கொண்ட 25 பேர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிஹார் தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் கொண்டுவந்த புதிய விதிகளின் படி கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் ஏன் வேட்பாளர்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் சம்பந்தப்பட்ட கட்சி பொதுவெளியில் விளக்க வேண்டும். இதைப் பின்பற்றி பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மவுரியா தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ மட்டுமல்ல, துணை முதல்வராகவும் உள்ளார். அவர் தனது தொகுதியில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராகவும் உள்ளார். ஏழை மக்களின் வாழ்வு மேம்பட அவர் கொடுத்த உழைப்பு, அவர் செய்த சமூகப் பணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சியின் மாவட்டப் பிரிவு அவரின் பெயரைப் பரிந்துரை செய்தது. மேலும் அவர் மீது ’அரசியல் போட்டி’ காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்பதால் மற்ற வேட்பாளர்களை விட அவர் முன்னிலை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யோகி அமைச்சரவையில் கரும்பு விவசாய மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ் ராணா மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரின் தேர்வு குறித்து தெரிவித்துள்ள பாஜக, “கரும்பு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்த விவகாரம் காரணமாக விவசாயிகள் மத்தியில் இவர் மிக பிரபலமாக இருப்பதால் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

பேட்ஹாபூர் ஸ்ரீ தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாபு லால் என்பவர் மீது அதிகபட்சமாக ஏழு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், இந்த வழக்குகள் அனைத்தும் ’அரசியல் போட்டி’ காரணமாகப் போடப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புத்தானா தொகுதி வேட்பாளர் உமேஷ் மாலிக், முஷாஃபர் நகர் தொகுதியில் போட்டியிடும் கபில் தேவ் அகர்வால், மீரட் தொகுதியில் போட்டியிடும் அமித் அகர்வால் ஆகியோர் மீது தலா ஆறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்கள் தேர்வையும் பாஜக அரசியல் போட்டி மற்றும் புகழ் போன்றவற்றைக் காரணம் காட்டி நியாயப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x