

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி கலந்துகொள்வது தொடர்பான மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படாது. என்ன காரணத்தால் இந்த வாகனங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பான காரணங்கள் குறித்து தமிழக அரசுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது'' என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்புக்கான மையக் கருத்து உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் தங்கள் அலங்கார வாகனங்களின் மாதிரிகளை அனுப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தும். அதன்படி, அனைத்து மாநிலங்களும் 10-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளைத் தயாரித்து புகைப்படம் அல்லது வரைகலை வடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவிடம் டெல்லியில் நேரடியாக வழங்குவார்கள். அத்துடன், அதில் இடம்பெறும் தலைவர்கள் படம், இதர விவரங்கள் அனைத்தையும் விளக்குவார்கள்.
அதில் மாற்றங்கள் செய்ய அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினால், தமிழக செய்தித் துறை அதிகாரிகள் அங்கேயே மாற்றங்கள் செய்து காட்டுவார்கள். இப்படி மத்திய அரசு அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படும் வரை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியாக ஒரு வடிவம் முடிவு செய்யப்படும். அதன்பிறகு, அலங்கார வாகனம் தயாரிக்கப்படும். இது வழக்கமான நடைமுறை.
தற்போதும் இதுபோல சுதந்திரப் போராட்டம் அடிப்படையில் புகைப்படங்களுடன் கூடிய அலங்கார வாகனம் தொடர்பான மாதிரி படம் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட நிலையில், 3 சுற்றுகளாக அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
4-வது சுற்றுக்கு தமிழக வாகனம் தேர்வு செய்யப்படுவது தொடர்பான தகவல் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் கேட்டபோது, கரோனா பரவல் காரணமாக அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், பாரதியார் தவிர வஉசி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதாலேயே தமிழக அரசின் வாகனம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.