

'டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் டாவோஸ் மாநாட்டு உரையைக் கிண்டலடித்துள்ளா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று இணையவழியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் தயங்கித் திணறினார். அந்த வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் டெலிப்ராம்டர் இல்லாமல் பேசவே முடியாது என்று. 'டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ராகுல் காந்தி ஏற்கெனவே ஒரு பேட்டியில் மோடியால் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேசவே முடியாது எனக் கூறியதும். அடுத்ததாக நேற்றைய மாநாட்டில் பிரதமர் மோடி ப்ராம்ப்டர் வேலை செய்யாததால் திணறியதும் இடம் பெற்றிருந்தது.
பிரதமரின் டெலிப்ராம்ப்டர் கோளாறு ஏற்பட்டது தொடர்பான கருத்து ட்விட்டரில் ட்ரெண்டானது.
முன்னதாக,டாவோஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம். இந்த உலகிற்கு இந்தியா ஜனநாயக நம்பிக்கை, தொழில்நுட்ப சக்தி மற்றும் இந்தியர்களின் திறமை, சுவாபம் கொண்ட ஒரு செண்டைக் கொடுத்து முதலீட்டாளர்களை வரவேற்றுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்" என்று கூறியிருந்தார்.
பிரதமரின் 'டெலிபிராம்ப்டர்' கருவி ஒரு பார்வை: 1960-களில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தக் கருவியை அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிபர்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இதை தொலைக் காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது வேட்பாளரான பராக் ஒபாமா, டெலிபிராம்ப்டரின் உதவியால் பிரச்சாரம் செய்து இருக்கிறார்.
ஆனால், பிரதமர் மோடி பயன்படுத்துவது சில மாதங்களுக்கு முன் தயாரித்து வெளியான அதிநவீன வகையாகும். இரு கண்ணாடிகளால் இணைக்கப்பட்ட இந்தக் கருவியானது சுமார் ஒரு அடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலத்தில் அமைந்திருக்கும். அதை பேசும் மேடையில் நின்றால் தெளிவாக தெரியும்படி மிகவும் மெல்லிய உயரமான கம்பியில் பொருத்தி விடுகிறார்கள். பிறகு, எலக்ட்ரானிக் கருவியான அதை கணினியுடன் இணைத்து 56 முதல் 72 அளவுகளிலான பதிவான எழுத்துருக்களில் ஓட விடுகிறார்கள்.
அதை மோடி நின்றபடி பார்த்து பேச, பேச எழுத்துகள் நகர்ந்தபடி இருக்கும். பார்ப்பவர்களுக்கு மோடி, தம் முன் அமர்ந்துள்ளவர்களை பார்த்து பேசுவது போல் இருக்கும். ஏனெனில். முன்புறம் இருந்து மேடையை பார்ப்பவர்களுக்கு டெலிபிராம்ப்டரில் ஊடுருவியபடி மோடியின் முகம் தெரியும். இந்தக் கருவியை பிரதமர் மோடி பயன்படுத்துவதை எளிதாகக் கண்டுபிடிக்காமல் இருக்க காரணம், அதன் அமைப்பே காரணம்.