

புதுடெல்லி: டெல்லியில் வரும் 26-ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் நடக்கும் விழாவில் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் அணி வகுப்பும், மாநில அரசுகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பும் இடம்பெற உள்ளது.
அந்தந்த ஆண்டின் சிறப்பை கருப்பொருளாகக் கொண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு அணிவகுப்பு, ‘இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவு’ என்ற கருப்பொருளில் நடக்க உள்ளது. பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் மத்திய விழாக்கள் இயக்குநரகம், குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளை இறுதி செய்கிறது.
இதற்காக இயக்குநகரத்தின் இணைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழுவிடம் மத்திய அரசின் துறைகளும், மாநில அரசுகளும் 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். அலங்கார ஊர்தி தேர்வுக்கான நிபுணர் குழு, 10 கூட்டங்களை நடத்துகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் மாநிலங்கள் சார்பில் எடுத்துரைக்கப்படும் மாற்றங்களை டெல்லியிலேயே செய்து அடுத்த கூட்டத்தில் நிபுணர் குழுவிடம் காட்ட வேண்டும்.
இந்த ஆண்டு அணிவகுப்புக்கு தமிழக அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி., மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் பற்றிய புகைப்படத் தகவல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடனான அலங்கார ஊர்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு நான்காவது கூட்டத்திலேயே தேர்வுக் குழுவால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவின் இறுதிப்பட்டியல் கடந்த வாரம் வெளியானது.
இதனிடையே, மேற்குவங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். மேற்குவங்க சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் இந்த ஆண்டு கொண் டாடப்படுகிறது. அதை மையப்படுத்தி அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடிதத்தில் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழலில் தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் சுதந்திரப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது என்பதை முன்னிறுத்தி அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க முயற்சி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, தற்போது பிரச்சினையாக ஆக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக புகார் கூறி, திசை திருப்பப்பட்டுள்ளது. அலங்கார ஊர்திகளை இறுதி செய்வதில் பிரதமர் அலுவலகத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து துறைகளை சேர்ந்த நிபுணர் குழுவால் அலங்கார ஊர்திகள் தேர்வாகின்றன. இந்த ஆண்டு விண்ணப்பித்த 56 ஊர்திகளில் 21 தேர்வாகி உள்ளன. நரேந்திர மோடி அரசில் 2016 முதல் 2021 வரை தமிழக அரசின் ஊர்திகள் 5 முறை தேர்வாகியுள்ளன. 2018-ம் ஆண்டில் மட்டும் தேர்வாகவில்லை’’ என தெரிவித்தன.
முதல் சுதந்திரப் போர் எது?
இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக போரிட்டவர்களாக கருதப்படுபவர்கள் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள். இவர்களை கணக்கில்கொள்ளாமல், 1887-ல் நடந்த மீரட் சிப்பாய் கலவரம்தான், முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்றில் பல ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளது. 2014-ல் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு ஒடிசாவில் 1817-ம் ஆண்டில் நடந்த பைகா கலவரத்தை, முதல் சுதந்திரப் போராக முன்னிறுத்த முயற்சிக்கப்படுகிறது.
கேரளாவின் திருவாங்கூரில் 1808-ம் ஆண்டில் நடந்த கலவரத்தை முதல் சுதந்திரப் போராக அறிவிக்க வேண்டும் என தென்னிந்திய வரலாற்று ஆசிரியர்கள் கோரி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் மீரட், ஒடிசா, கேரளாவுக்கு முன்பாக தமிழகத்தின் வேலூர் கோட்டையில் சிறைபட்டிருந்த திப்பு சுல்தானின் வாரிசுகளால் 1806-ம் ஆண்டு நடந்த புரட்சி, மத்திய அரசுகளால் கணக்கில் கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.