டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் ரஃபேல் உட்பட 75 விமானங்கள் பங்கேற்கும்: இந்திய விமானப் படை அறிவிப்பு

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் ரஃபேல் உட்பட 75 விமானங்கள் பங்கேற்கும்: இந்திய விமானப் படை அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ராஜபாதையில் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 75 விமானங்கள் பறந்து செல்லும்என விமானப் படை அறிவித்துள்ளது.

இந்தியா இந்த ஆண்டு 73-வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினர்களாக பங்கேற்பதற்காக கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் பிரதிதிகள் டெல்லி வந்து சேர்ந் துள்ளனர்.

கடந்த ஆண்டு நாட்டின் 75-வதுசுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது. இந்த விழாவை நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்கள் கொண்டாடும் வகையில் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு குஜராத்தில் தொடங்கி வைத்தார்.

75 ஆண்டு கால முற்போக்கு இந்தியா மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம், மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றை கொண்டா டுவதற்காக இந்த இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் வரை கொண்டாட்டம்

கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி தொடங்கிய இந்த கொண்டாட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடையும்.

இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தன்று தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலைப் பண்பாட்டு அலங்கார ஊர்திகளின் கண்கவர் அணிவகுப்பு இடம்பெற உள்ளது.

இந்த ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தாலும் குடியரசு தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபுணர் குழு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்திய விமானப் படையின் தகவல் தொடர்பு அதிகாரி கூறும்போது, “ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் 75 விமானங்கள் பறந்து செல்லும். ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் விமானங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் 5 ரஃபேல் விமானங்களும் இடம்பெறும்.

ஜாகுவார் சாகசம்

17 ஜாகுவார் போர் விமானங்கள் 75 என்ற எண் வடிவில் பறந்து செல்லும். கடற்படையின் மிக்29கே மற்றும் பி-8ஐ ரக விமானங்கள் புதுமையான வடிவில் பறந்து செல்லும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in